ராகுல் காந்தி
இந்தியா

இத்தாலியுடன் ஆழமான மற்றும் வலுவான பிணைப்பு: ராகுல் காந்தி கிண்டல் செய்த நிலையில் MEA பதிவு

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்நாட்டு தலைவர்களை அடிக்கடி கட்டிப்பிடிப்பதை ராகுல் காந்தி விமர்சித்தார்.

இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து காங்கிரஸ் தேசிய மாநாட்டில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

அதில் "இத்தாலியுடன் நாங்கள் ஆழமான மற்றும் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளோம். இந்த உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளைப் பொறுத்தவரை, அவை பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் பேணப்படுவது முக்கியமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

காங்கிரஸ் தேசிய மாநாட்டில் நடந்தது என்ன?

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்நாட்டு தலைவர்களை அடிக்கடி கட்டிப்பிடிப்பதை விமர்சித்த ராகுல் காந்தி, "பிரதமர் மோடிக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மனிதர்களின் மண்டைக்குள் விசித்திரமான எண்ணங்கள் வருகின்றன. இதையே அவர் 'வெளியுறவுக் கொள்கை' என்று நினைக்கிறார்" என்கிறார்.

மேலும் ஒரு படி மேலே சென்று மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்தார். உடனே சந்தீப் தீட்சித் நகைக்சுவையாக, "என்னை மெலோனி (இத்தாலி பிரதமர்) என்று நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே?" என்று கேட்க, ராகுல் காந்தி சிரித்தபடியே "நான் இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை" என்று பதிலளித்தார்.

அதே கூட்டத்தில் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை கோமாளிகள் கூட்டம் என்றும் அவர்கள் அதானி மற்றும் அம்பானி போன்ற பெரிய முதலாளிகளின் கர சேவகர்களாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.

ராகுல் காந்தி தனது உரையின் முடிவில், "பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்யும் வரை நாங்கள் அவர்களைத் தூங்க விடமாட்டோம். வெறுப்போ வன்முறையோ இன்றி, அன்பினாலும் அகிம்சையினாலும் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்" என தெரிவித்தார்.

பாஜகவின் கண்டனம்

ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கள் மிகவும் அருவருப்பான, தரமற்ற ஒன்று என்றும் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு இது அழகல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா சாடியுள்ளார்.

காங்கிரஸ் விளக்கம்

இதற்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷமா முகமது பேசுகையில், "ராகுல் காந்தி மெலோனியின் பெயரைப் பயன்படுத்தவே இல்லை. அவர் தனது கட்சியின் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டியணைத்தார், இதில் எந்தத் தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "நான் ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்டவள். பொதுவாக வெளிநாட்டவர்கள் கை குலுக்குவதையே விரும்புவர். எடுத்தவுடனே கட்டிப்பிடிப்பதை விரும்புவதில்லை" என்று பிரதமர் மோடியின் செய்கையை விமர்சித்தார்.