பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை குற்றமாக வரையறைக்கும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69, திருநங்கைகளுக்கு பொருந்தாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு திருநங்கை, இந்திய தண்டனை சட்டத்தின் 69வது பிரிவின் கீழ் 'பெண்' என்ற வரையறைக்குள் வரமாட்டார் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இஜ்ஜத்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு குற்ற வழக்கில் முகமது ஜாகிர் என்பவருக்கு கடந்த 15ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.
திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்து ஒரு திருநங்கையுடன் உடல்ரீதியான உறவு வைத்திருந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பி.என்.எஸ். சட்டத்தின் 69வது பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
புகார்தாரரான அந்தத் திருநங்கை, தான் பிறப்பால் ஆணாக இருந்ததாகவும், பின்னர் ஏப்ரல் 11, 2023 அன்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், தனது திருநங்கை அடையாளம் குறித்து பிரதிவாதியிடம் முன்பே பேசியிருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
புதிய குற்றவியல் சட்டமான பி.என்.எஸ். சட்டத்தின் 69வது பிரிவு, திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்தோ அல்லது வேறு வகையில் ஏமாற்றியோ பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதை குற்றமாக வரையறுக்கிறது.
இந்நிலையில் பிஎன்எஸ் பிரிவு 69-இல் உள்ள 'பெண்' என்ற சொல், பெண்ணாகப் பிறந்தவர்களை மட்டுமே உள்ளடக்கியது என்று தெளிவுபடுத்திய நீதிமன்றம், பிறப்பால் ஆணாகப் பிறந்த ஒருவர், பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும் அல்லது அதற்கு நேர்மாறாகச் செய்தாலும், அவர் ஒரு திருநங்கையாகவே கருதப்படுவார் என்று தெரிவித்துள்ளது.
பிஎன்எஸ் சட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விதிகளில் திருநங்கைகளையும் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு முன்னரே பரிந்துரைத்திருந்ததாகவும், ஆனால் நாடாளுமன்றம் அந்தப் பரிந்துரையை ஏற்கவில்லை என்றும் மேலும் 'பெண்' என்பதற்கான வரையறை மாற்றமின்றி இருந்ததாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதன் அடிப்படையில், இந்த வழக்கில் பிரிவு 69 மேலோட்டமாகப் பொருந்தாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்குப் ஜாமீன் வழங்கியது.
இருப்பினும், 2019ஆம் ஆண்டின் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ், திருநங்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட சட்ட பாதுகாப்பு உள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.