டெல்லி ஜந்தர் மந்தரில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டம் ஒன்றின் தொடர்பாக, செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிக்கையாளர்களிடம், அம்மாநில போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் போராட்டங்களின்போது செய்தியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், “செய்தி முக்கியமானது, அதை நீங்கள் பெறும் விதமும் முக்கியம்!” என்று குறிப்பிட்டு, பத்திரிகையாளர்கள் தங்கள் கடமைகளை ஆற்றும்போது செய்ய வேண்டியவை என நான்கு வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளது.
அவை;
போராட்டங்கள் தொடர்பாக செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிக்கையாளர்கள் தங்களது நிறுவனத்தின் அடையாட அட்டையை அல்லது பத்திரிக்கையாளருக்கான அங்கீகார அட்டையை கொண்டுசெல்ல வேண்டும்.
சம்பவ இடத்தில் அவர்கள் தங்களது அடையாள அட்டை தெளிவாக தெரியும் படி அணிந்திருக்க வேண்டும்.
செய்தியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் காவல்துறையினருக்கும், சட்ட அமலாக்கத்துறையினருக்கும் இடையூறு விளைவிக்காதவாறு இருக்கவேண்டும்.
பதட்டமான சூழ்நிலைகளின் போது, சம்பவ இடத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள், நிகழ்வுகளை போதுமான மற்றும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைபிடித்து சேகரிக்க வேண்டும்.
போராட்டக்காரர்களிடமிருந்து தங்களைத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் வகையில் அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்திரில் அக்டோபர் 3 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, தங்களுக்கு காவல்துறை அதிகாரிகளால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக மூன்று பெண் பத்திரிக்கையாளர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இந்த புகார்கள் தொடர்பாக டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உதவி காவல் ஆணையர் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள சம்பவமும் கண்டனங்களை பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து பதவி உயர்வுகள் வழக்கமானவை என்றும், அதற்கான முன்மொழிவு இந்த போராட்டங்களுக்கு முன்னரே அனுப்பப்பட்டுவிட்டது என்றும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.