அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை கொல்கத்தா-– சைராங் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதில் பல பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து கவுகாத்தி புறநகர்ப் பகுதியில் உள்ள டிகாரு ரெயில் நிலையம் அருகே நிகழ்ந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தின் சைராங்கிலிருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த கொல்கத்தா- சைராங் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில், இன்று காலை சுமார் 6.54 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில் ரெயில் இன்ஜின் உட்பட ஆறு பெட்டிகள் தடம் புரண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த பயணிகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் அவர்களின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.