இந்தியா

திடீரென இடிந்து விழுந்த 2 மாடி கட்டிடம்: 3 பேர் பரிதாப பலி

ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என தெரிவித்தனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

டெல்லி என்சிஆர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியின் வடமேற்கே உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் இன்று பிற்பகல் 2 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தெரிவித்தனர்.

மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புப்படை மற்றும் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.