பிரதமர் மோடி
இந்தியா

ஷாங்காய் உச்சி மாநாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மையம் அமைப்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்த இந்தியா

பயங்கரவாதம் என்ற தீவிர பிரச்சினையில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமில்லை என்று ஒரே குரலில் பேசி நாம் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாடு முடிவடைந்த நிலையில், SCO உறுப்பு நாடுகளின் பாதுகாப்பிற்கு எதிரான சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான உலகளாவிய மையம் உள்ளிட்ட 13 முக்கிய கோரிக்கைகளை இந்தியா முன்வைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து்ளளது.

இந்த மையத்தின் முக்கிய நோக்கம் பயங்கரவாதம், தீவிரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற நாடு கடந்த அச்சுறுத்தல்களை கையாள்வதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பகிர்வைச் சாத்தியமாக்குவதாகும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCO சாசனத்தில் திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்கள் தொடர்பான ஒரு நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இது, அந்த அமைப்பின் வளர்ந்து வரும் நிறுவனக் கட்டமைப்பை வடிவமைப்பதில் இந்தியா பங்கேற்க வழிவகை செய்வதோடு, SCO கட்டமைப்பிற்குள் ஆங்கிலத்தைச் சேர்க்கும் முடிவும் ஒன்றாகும்.

SCO என்பது 2001-ல் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்ட ஒரு அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பாகும். அதன் பின்னர், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை முழு உறுப்பினர்களாகச் சேர்த்து இது விரிவடைந்துள்ளது. மேலும் பல நாடுகள் பார்வையாளர் அல்லது உரையாடல்-பங்குதாரர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

SCO கட்டமைப்பு என்பது அடிப்படையில் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மற்றும் பொருளாதார, அரசியல் ஒத்துழைப்புகளில் கவனம் செலுத்தும் ஒரு நிரந்தரமான யூரேசிய அரசுகளுக்கிடையேயான மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாகும்.

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பயங்கரவாதத்திற்கு எதிராக உறுப்பு நாடுகளிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பைச் சாத்தியமாக்கும் வகையில், SCO-வின் போதைப்பொருள் தடுப்பு மையத்தின் நிர்வாகக் குழுவிற்கான விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் முடிவும் ஒன்றாகும்.

பிரதமர் மோடி

இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி பேசியதாவது:-

பயங்கரவாதம், மனித குலம் முழுவதற்கும் பலத்த சவாலாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், நாம் செயல்- பதிலடி என்ற அணுகுமுறையிலேயே தொடர்ந்து மூழ்கி இருக்க முடியாது.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தல், ஆள்தேர்வு செய்தல், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் அளித்தல், மூளைச்சலவை செய்தல் போன்ற பயங்கரவாத கட்டமைப்பை முழுமையாக தகர்தெறிய நாம் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.

இரட்டை நிலைப்பாடு

பயங்கரவாதம் என்ற தீவிர பிரச்சினையில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமில்லை என்று ஒரே குரலில் பேசி, நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

பயங்கரவாதத்தை கொள்கை ஆயுதமாக பயன்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு நாம் வலிமையான செய்தி விடுக்க வேண்டும். பயங்கரவாதம் யாருடைய வியூக சொத்தாகவும் இருக்க முடியாது என்று கூற வேண்டும்.

இன்றைய உலகம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. ஒரு பிராந்தியத்தில் நடக்கும் மோதல், அந்த பிராந்தியத்து டன் அடங்கி விடாது, உலகம் முழுவதும் அதன் தாக்கம் உணரப்படும் என்பதை மேற்கு ஆசிய பிரச்சினையில் பார்த்தோம்.

போர்க்களத்தில் தீர்க்கக்கூடாது

எரிசக்தி பாதுகாப்பு, கடல்சார் வர்த்தகம், வினியோக சங்கிலித்தொடர் ஆகியவற்றை பாதித்ததை கவனித்தோம். தெற்குலக நாடுகள்தான் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டன.

எனவேதான், அனைத்து பதற்றங்களும், மோதல்களும் போர்க்களத்தில் அல்லாமல், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இணைப்பு வசதிகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளது. சந்தைகள் இணைப்பு, வர்த்தகம், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் ஆகியவற்றை இந்தியா ஆதரிக்கிறது. அதே சமயத்தில், அத்தகைய முயற்சிகள் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது அவசியம்.

இதயம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒத்துழைப்பு, மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும். மக்களிடையிலான பிணைப்புதான் நமது மாபெரும் பலம்.

இந்தியாவைப் பொறுத்தவரை மாபெரும் நாகரிகங்கள், கலாசாரங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் கலவைதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. அடுத்த 25 ஆண்டுகள், மக்களுக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்பு, நமது ஒத்துழைப்பின் இதயமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.