இந்தியா

கொடைக்கானல் சுற்றுப்பயணத்தின் போது 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்

சுற்றுலா முடிந்து பள்ளிக்கு திரும்பியதும் 10-ம் வகுப்பு மாணவிகள் இதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் ஏலத்தூர் போலீசில் புகார் செய்தார்.

கொடைக்கானல் சுற்றுலா பயணத்தின் போது 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் சாலித், மாணவிகளின் புகாரின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குட்டியாடி பகுதியை சேர்ந்தவர் சாலித் (வயது 43). இவர் உயர்நிலைபள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

பாலியல் தொல்லை

சம்பவத்தன்று அவர் வேலை பார்க்கும் பள்ளியின் மாணவ-மாணவிகள் சுமார் 160 பேர் தமிழகத்தின் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். மாணவ-மாணவிகள் தனித்தனி பஸ்களில் சென்றனர். இதில் மாணவிகள் பஸ்சில் சாலித் பயணம் செய்துள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர், மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

சுற்றுலா முடிந்து பள்ளிக்கு திரும்பியதும் 10-ம் வகுப்பு மாணவிகள் இதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் ஏலத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 7 மாணவிகள், ஆசிரியர் மீது புகார் கூறினர். மறுநாள் மற்றொரு மாணவி புகார் அளித்தார்.

ஜாமின் மனு தள்ளுபடி

அவர்களது வாக்குமூலங்கள் அடிப்படையில் போலீசார் 8 தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சாலித் தலைமறைவாகி விட்டார். அவர் வயநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் சாலித் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சூழலில் ஆசிரியர் சாலித், ஏலத்தூர் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT