இந்தியா

கோவில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களின் ஊதியம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் குறித்து ஆய்வு செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் நீதி கமிசன் அல்லது நிபுணர் குழு அமைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

கடந்த மாதம் 4 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று 'ருத்ராபிஷேகம்' செய்துள்ளார். அப்போது அங்குள்ள அர்ச்சகர்களும், ஊழியர்களும் உபாத்யாயாவிடம் தங்களுக்கு அன்றாட வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்தனர். பின்னர் அவர்களை அழைத்து பேசிய உபாத்யாயா உங்களின் கோரிக்கைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அவர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் குறித்து ஆய்வு நீதிக் கமிஷன் அல்லது நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அர்ச்சகர்கள் தட்டுகளில் தட்சணை வாங்கக் கூடாது என அரசு தடை விதித்துள்ளது. அரசு அவர்களுக்கு முறையான சம்பளமும் தருவதில்லை. தட்சணை வாங்கவும் தடை விதித்தால் அவர்கள் எப்படி வாழ்வார்கள்?.

தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கோவில் அர்ச்சகர்களின் நிலையும் இதே நிலையில்தான் உள்ளது.

இதில் பெரிய கோவில்களைத் தவிர, கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மிகக் குறைந்த அளவே மாதத்திற்கு ₹1,000 முதல் ₹3,000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு இருப்பது போல, கோவில் பணியாளர்களின் தகுதி, பணி நேரம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அடிப்படையில் அவர்களின் ஊதியத்தை முறைப்படுத்த ஒரு தனி நிபுணர் குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.

அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு , ஓய்வூதியம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கான உதவிகள் போன்ற அடிப்படை நலத்திட்டங்களை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் மிக முக்கிய நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை விசாரிக்கிறது.