தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆருக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள நிலையில் ராகுல் காந்தியின் சமூக வலைதள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறையின்போது தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகளை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
முன்னதாக நேற்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பாத்திரத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களாலும் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டன என்று தெரிவித்திருந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான படிவம் 6 திருத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் ஆணையம் நிராகரித்தது.
எனவே இந்த நடவடிக்கைகள் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டே எடுக்கப்பட்டன என்றும் ஆணையத்தின் உள் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கருத்துகளோ அல்லது கேள்விகளோ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவாகக் கருதப்பட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே ஆணையத்தின் முடிவுகளை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 248 பக்க பதில் பிரமாணப் பத்திரத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக செயல்படுவதை தடை செய்ய வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கை சட்டப்பூர்வமானதல்ல என்றும், அதனை நிலைநிறுத்த முடியாது என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இருப்பினும், ஆணையர்களால் கூட்டாக முடிவு எடுக்கப்பட்டது என்பதை காட்டும் குறிப்புகள் அல்லது பிற ஆவணங்கள் பிரமாணப் பத்திரத்தின் சேர்க்கப்படவில்லை.
இவற்றையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடக் கோரி மனுதாரரான இந்தியா கூட்டணி தனது மனுவில் கோரியுள்ளது.
இதற்கிடையில், ஞானேஷ் குமாருக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 'சத்யம் சிவம் சுந்தரம்' என்ற சமஸ்கிருத சொற்றொடரை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும், சிவபெருமானின் சின்னமான பட்டையும் அதன் மத்தியில் செங்குத்தான சிவப்பு திலகமும் கொண்ட பஸ்ம குறியின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். வேறெதுவும் தெரிவிக்காமல் இதை மட்டும் அவர் பகிர்ந்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.