இந்தியா

திரிணாமுல் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து சாந்தனு சென் விலகல்!

வங்காள மக்கள் நம்மை நிராகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், ஒரு செய்தித் தொடர்பாளராக எந்த வகையிலும் இனி கட்சியினரை ஆதரித்துப் பேச எனது மனசாட்சி இடம் கொடுக்காது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் பதவிகளில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பி-யுமான டாக்டர் சாந்தனு சென் விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சந்தித்த தோல்வியை தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை மம்தா பானர்ஜிக்கு அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

"பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளின் போது எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், பல சர்ச்சைக்குரிய விவகாரங்களில் கட்சிக்காகப் ஊடகங்களில் வாதிட்டுப் போராடியுள்ளேன். அதற்காகப் பொதுமக்களும் என்னை அடிக்கடி பாராட்டியுள்ளனர்.

ஆனால், ஆர்.ஜி. கர் விவகாரம், அபாயா விவகாரம் மற்றும் வேலைக்கு பணம் பெறும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஒழுக்கக்கேடான செயல்கள் மற்றும் ஊழல்களுக்காக வங்காள மக்கள் நம்மை நிராகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், ஒரு செய்தித் தொடர்பாளராக எந்த வகையிலும் இனி கட்சியினரை ஆதரித்துப் பேச எனது மனசாட்சி இடம் கொடுக்காது.

எனவே, மக்களின் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, திரிணாமுல் காங்கிரஸின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நான் விலக விரும்புகிறேன். தயவுசெய்து எனது ராஜினாமாவை ஏற்று மதிக்கவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.