பொதுவாக கனமழை மற்றும் சூறாவளிக் காற்றினால் மரங்கள் வேரோடு சாய்வது மக்களுக்குப் பெரும் நஷ்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தும். ஆனால், பெங்களூருவைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவருக்கு, மழையினால் விழுந்த மரம் ஒன்று ஒரே நாளில் அவரை லட்சாதிபதியாக மாற்றியுள்ள ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த என்.ஜி.கேசரி (85) என்ற முதியவரின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த சந்தன மரம்தான் அவருக்கு இந்த அதிர்ஷ்ட மழையைக் பொழிந்துள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, கேசரியின் வீட்டு முற்றத்தில் தானாகவே ஒரு சிறிய கன்று முளைத்தது. ஆரம்பத்தில் அது என்ன மரம் என்று தெரியாமல் வளர்த்த கேசரி, பின்னர் அது மதிப்புமிக்க 'சந்தன மரம்' என்பதை அறிந்துகொண்டார். அக்காலத்தில், சந்தன மரம் எங்கு வளர்ந்தாலும் அது அரசுக்கே சொந்தம் என்ற கடுமையான சட்டம் இருந்தது.
இதனால், தேவையில்லாத வம்பில் மாட்டிக்கொள்ளாமல், மரத்தை இப்போதே வெட்டி எறிந்துவிடு என அண்டை வீட்டாரும் நண்பர்களும் கேசரியை எச்சரித்தனர். ஆனால், இயற்கையின் மீது பற்றுகொண்ட கேசரி, அதை வெட்ட மறுத்து, திருடர்களிடமிருந்து பாதுகாக்க மரத்தைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து தன் பிள்ளை போல 40 ஆண்டுகளாகப் பாதுகாத்து வளர்த்தார்.
கடந்த ஜூன் மாதம் பெங்களூருவில் பெய்த கடுமையான மழையின் போது, அருகில் இருந்த ஒரு பெரிய மரம் கேசரியின் சந்தன மரத்தின் மீது சரிந்தது. இதில் அந்தச் சந்தன மரம் பாதியாக உடைந்து விழுந்தது. தான் 40 ஆண்டுகள் வளர்த்த மரம் விழுந்ததைக் கண்டு கேசரி மிகுந்த வேதனை அடைந்தார்.
மரம் விழுந்தது குறித்து கேசரி உடனடியாக வனத்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தபோது, அந்த மரம் சுமார் 1 மெட்ரிக் டன் எடையும், மிகத் தரமான முதிர்ச்சியையும் கொண்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, கர்நாடக அரசின் புகழ்பெற்ற 'மைசூர் சாண்டல் சோப்' தயாரிக்கும் நிறுவனம் அந்த மரத்தை முறைப்படி பெற்றுக்கொண்டு, அதன் மதிப்பான ரூ.28 லட்சத்தை கேசரியிடம் காசோலையாக ஒப்படைத்தது.
சந்தன மரத்தைத் திருடர்களிடமிருந்தும், கடத்தல்காரர்களிடமிருந்தும் 40 ஆண்டுகள் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் வளர்த்த கேசரியின் நெறியைப் பாராட்டி, கர்நாடக அரசு அவருக்கு "சந்தன மகுட ரத்தினம்" என்ற உயரிய பட்டத்தையும் வழங்கி கவுரவித்துள்ளது.
"பணம் மரத்தில் காய்க்காது என்பார்கள். ஆனால், நேர்மையுடன் வளர்த்தால் மரமே பணத்தைக் கொடுக்கும் என்பதை நிரூபித்துள்ளார் இந்த 85 வயது பெரியவர் கேசரி" என சமூக வலைதளங்களில் இந்த செய்தி இப்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.