இந்தியா

பீகாரில் புதிதாக திறக்கப்பட்ட 551 பள்ளிகளுக்கு காவி சாயம்: மதத்தை அரசு ஊக்குவிப்பதாக AIMIM குற்றச்சாட்டு

வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மதத்தை அரசு ஊக்குவிக்க முயற்சிக்கிறது.

பீகார் அரசு பள்ளிகளில் காவி வண்ணம்:

பீகாரில் புதிதாகத் திறக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாதிரிப் பள்ளிகளுக்குக் காவி வண்ணம் பூச பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதை அடுத்து, அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.

பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, நேற்று 551 மாதிரிப் பள்ளிகளைத் திறந்து வைத்தார். அப்போது சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிகள் அனைத்திற்கும் வழக்கமான வண்ணங்களுக்குப் பதிலாக காவி வண்ணம் பூசப்பட்டு இருந்தது.

ஏஐஎம்ஐஎம் குற்றச்சாட்டு:

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட என்டிஏ கூட்டணிக் கட்சிகள் இந்த நடவடிக்கையை ஆதரித்த நிலையில், இது “காவிமயமாக்கல்” முயற்சி என்று ஏஐஎம்ஐஎம் குற்றம் சாட்டியது.

வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மதத்தை அரசு ஊக்குவிக்க முயற்சிப்பதாகவும் மாநில AIMIM தலைவர் அக்தருல் இமான் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த அரசாங்கம் பள்ளிகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையுமே காவிமயமாக்குகிறது.

அது மசூதிகளை இடித்து, மசூதிகள் மற்றும் கோயில்களின் பெயரால் மக்களிடையே பகைமையைத் தூண்டிவிடுகிறது.

இது ஜனநாயகத்தின் ஆடையைக் களைவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த நடவடிக்கை நாட்டின் சமூகக் கட்டமைப்பையும் ஜனநாயக விழுமியங்களையும் பாதிக்கும்.

நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. முன்பு நிலவிய சமூக ஒற்றுமையும் அன்பும் புதிய தலைமுறையினரிடம் காணப்படவில்லை.

இது ஜனநாயகத்திற்கோ அல்லது எந்தவொரு நாகரிக சமூகத்திற்கோ நல்ல அறிகுறி அல்ல,” என்று அவர் கூறினார்.

பாஜக பதில்:

இதையடுத்து மாநில கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி இந்த விமர்சனத்தை நிராகரித்ததோடு, வண்ணங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சர்ச்சையை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான அசோக் சௌத்ரி கூறுகையில், “நிறங்களின் அடிப்படையில் நாம் பிளவுகளை உருவாக்கக் கூடாது. இன்று, குழந்தைகளுக்கு மத பேதமின்றி, உயர் தொழில்நுட்பக் கல்விக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்.

இருப்பினும், இது எதிர்க்கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. காவி நிறம் சரஸ்வதி தேவியையும் செழிப்பையும் குறிக்கிறது. கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

பள்ளி கட்டிடங்களின் நிறம் குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதை விடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இருபது ஆண்டு கால ஆட்சியில் கல்வியின் தரம் மேம்பட்டுள்ளதா என்பதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.