ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதும், ஈரான் தன் பங்கிற்கு இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதால் மேற்காசிய நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், மேற்காசியாவில் நடைபெறும் போர் தொடர்பாக பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
"மேற்காசிய நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரபு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களது உயிர் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பது இந்தியாவிற்கு பெரும் கவலையளிக்கும் விஷயம் ஆகும். ஹார்முஸ் நீரிணையில் பல கப்பல்கள் சிக்கிக் கொண்டுள்ளன. அந்த கப்பல்களில் இந்திய குழு உறுப்பினர்கள் பெருமளவில் சிக்கியுள்ளனர். இதுவும் இந்தியாவிற்கு பெரும் கவலையளிக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், இந்தியாவின் மேலவையானது அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஒருமித்த குரலை எழுப்புவது மிகவும் முக்கியமாகும்.
பெரும்பாலான மேற்காசிய நாடுகளின் தலைவர்களிடம் நான் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அனைத்து அரபு நாடுகளுடனும் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாங்கள் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கை மூலமாக இந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதே எங்களது இலக்கு.
பதற்றத்தை தணிப்பது மற்றும் ஹார்முஸ் நீரிணையை திறப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். ஹார்முஸ் நீரிணை போன்ற சர்வதேச கடல் பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பொது மக்கள், பொது இடங்களில் உள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து சார்ந்த உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இந்திய கண்டித்துள்ளது.
போர் போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்ற நடவடிக்கையை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பதற்ற சூழலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியுள்ளது. போரில் எவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவது மனிதகுலத்தின் நலனுக்கு உகந்தது அல்ல. அமைதி தீர்வுகளை நோக்கி அனைத்து தரப்பினரையும் ஊக்குவிப்பதே இந்தியாவின் முயற்சிகளாக இருந்து வருகின்றன," என்றார்.