இந்தியா

சாலை பள்ளங்களை சீரமைக்க 'சடக்' செயலி: சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் டெல்லி மாணவனின் AI முயற்சி!

தற்போது இந்த இணையதளம் மூலம் இந்தியா முழுவதும் 1,800க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டெல்லி வளர்ச்சி வாரிய (DDA) அதிகாரிகள் பார்த் ஆனந்தின் இந்த முயற்சியைப் பாராட்டி, இத்தொழில்நுட்பத்தை அரசு அமைப்புகளுடன் இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் பார்த் ஆனந்த், நாட்டின் மோசமான சாலை பள்ளங்களை சரிசெய்வதற்காக 'சடக்' என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இணையதளத்தை உருவாக்கி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். டெல்லி வீதிகளில் உருவான இந்த முயற்சி, தற்போது சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்து பிஜி தீவு வரையிலான பகுதிகளிலும் பாராட்டைப் பெற்று வருகிறது.

பெற்றோரின் விபத்து

டெல்லி ஜனக்புரியில் உள்ள செயிண்ட் பிரான்சிஸ் டி சேல்ஸ் பள்ளியில் பயின்று வரும் பார்த் ஆனந்த், வழக்கமான ஒரு நாளில் தனது பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த ஒரு ஆபத்தான பள்ளத்தில் வாகனம் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாரத்தின் பெற்றோருக்குக் பலத்த காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு குணமடைய பல மாதங்கள் ஆகின. சாலைப் பள்ளங்களால் ஏற்படும் ஆபத்துகளையும், அரசாங்க செயலிகளில் புகாரளித்தால் நடவடிக்கை எடுக்க மாதக்கணக்கில் ஆகும் தாமதத்தையும் உணர்ந்த பார்த், இதற்குத் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண உறுதியேற்றார்.

'சடக்' செயலி

தனது பயிற்சி வகுப்புகளுக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட மூன்று மணி நேர ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, பார்த் தானே தனியாகக் குறியீட்டு முறையைக் கற்றுக்கொண்டார். பின்னர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைச் சேர்த்து 'சடக்' என்ற தளத்தை முழுமையாக வடிவமைத்தார். இந்தத் தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள சாலைப் பள்ளங்களை உடனடியாகப் புகைப்படமெடுத்து பதிவேற்ற முடியும்.

செயற்கை நுண்ணறிவானது அந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதோடு, ஒரே பள்ளம் பலமுறை பதிவேற்றப்படுவதைத் தவிர்க்கிறது. மேலும், ஜிபிஎஸ் தரவுகள் மூலம் அந்தச் சாலை எந்த அரசுத் துறையின் (MCD அல்லது PWD) கீழ் வருகிறது என்பதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தானாகவே புகார் மின்னஞ்சல்களை அனுப்புகிறது.

தேசிய அளவில் கிடைத்த அமோக வரவேற்பு

தற்போது இந்த இணையதளம் மூலம் இந்தியா முழுவதும் 1,800க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 220க்கும் மேற்பட்ட புகார்களும், பெங்களூருவில் 1,500க்கும் மேற்பட்ட புகார்களும் பதிவாகியுள்ளன. அதுமட்டுமின்றி ராஜஸ்தான், உத்தரகாண்ட், கேரளா போன்ற மாநிலங்களிலும் மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பொதுவாக அரசு அமைப்புகளில் புகாரளித்தால் 3 முதல் 4 மாதங்கள் ஆகும் நிலையில், 'சடக்' தளம் மூலம் அளிக்கப்பட்ட புகார்களால் டெல்லி மற்றும் பெங்களூருவில் 2 முதல் 5 நாட்களுக்குள் பல ஆபத்தான சாலைப் பள்ளங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன.

டெல்லி வளர்ச்சி வாரிய (DDA) அதிகாரிகள் பார்த் ஆனந்தின் இந்த முயற்சியைப் பாராட்டி, இத்தொழில்நுட்பத்தை அரசு அமைப்புகளுடன் இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். டெல்லியின் வீதிகளில் ஒரு தனிநபரின் ஆதங்கமாகத் தொடங்கிய இந்த 'சடக்' திட்டம், தற்போது பசிபிக் பெருங்கடலில் உள்ள பிஜி தீவு உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் உயர்கல்வி பயில விரும்பும் பார்த், சாலைப் பிரச்சனைகளை மக்கள் சாதாரணமாகக் கடந்து செல்லாமல் உரிமையோடு கேள்வி கேட்க வேண்டும் என்பதையே தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT