சபரிமலை கோவிலில் திருவாபரணங்களை சரிபார்க்கும் குழு ஆய்வின்போது 55 சவரன் தங்கக் கிரீடத்துக்கு பதிலாக போலி கிரீடம் இருந்தது அம்பலமாகி உள்ளது.
கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மேலும், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறினால் காணிக்கை செலுத்துவதும் வழக்கமாக உள்ளது.
அந்த வகையில், கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் 445.78 கிராம் (சுமார் 55.72 சவரன்) எடைகொண்ட தங்கக் கிரீடத்தை சபரிமலை ஐயப்பனுக்குக் காணிக்கையாக வழங்கினர். இந்த விபரம் கோவில் பதிவேடுகளிலும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் உள்ள திருவாபரணங்களின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையிலான திருவாபரணங்களை சரிபார்க்கும் குழு ஆய்வின்போது 55 சவரன் தங்கக் கிரீடத்துக்கு பதிலாக போலி கிரீடம் இருந்தது அம்பலமாகி உள்ளது.
பாதுகாப்பு அறையில் இந்த கிரீடம் சிசிடிவி கண்காணிப்பு இல்லாத பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இதுதவிர ஆரன்முளா ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க மாலையும் மாயமாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஏற்கனவே துவார பாலகர் சிலைகளில் தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது 5.72 சவரன் தங்கக் கிரீடம் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.