சபரிமலை
இந்தியா

சபரிமலை ஆன்லைன் முன்பதிவில் முறைகேடா? தேவசம்போர்டு விஜிலென்ஸ் அறிக்கை சமர்ப்பிப்பு

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் தொடங்கியிருப்பதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு (மெய்நிகர் வரிசை) மற்றும் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆன்லைன் முன்பதிவு வரிசை

இந்தநிலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்த பக்தர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கோவிலுக்கு வரவில்லை. முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் வருகை குறைந்ததற்கு பின்னால் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

முன்பதிவு ஸ்லாட்டுகளை தனியார் டிராவல் ஏஜென்சிகள் முறைகேடாக பயன்படுத்தி பக்தர்களிடம் அதிகளவில் கட்டணம் வசூலித்து மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் ஆன்லைன் முன்பதிவில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மேலும் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வஜிலென்சு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு விஜிலென்சு பிரிவு விசாரணையும் நடத்தியது. இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவில் சதி, முறைகேடு அல்லது தொழில் நுட்ப மோசடி எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு விஜிலென்ஸ் பிரிவு இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் “வெர்ச்சுவல் கியூ” முன்பதிவு முறை முழுமையாக பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும் செயல்படுகிறது. முன்பதிவு குறைந்ததற்கு பின்னால் எந்தவித சதியோ, இடைத்தரகர்களின் தலையீடோ அல்லது மோசடியோ இல்லை.

சீசனின் தொடக்க நாட்கள் மற்றும் மழை எச்சரிக்கை போன்ற காரணங்களால் வெளிமாநில பக்தர்களின் வருகை திட்டமிடலில் ஏற்பட்ட மாற்றங்களே பக்தர்கள் வருகை குறைந்ததற்கு காரணம். தற்போது பக்தர்கள் வருகை சீராக அதிகரித்து வருகிறது.

சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில், தேவசம்போர்டு மற்றும் கேரள காவல்துறை இணைந்து விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

திருவிதாங்கூர் தேவசம்போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் (sabarimalaonline.org) வழியாக தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

3 இடங்களில் சிறப்பு ஸ்பாட் புக்கிங் மையங்கள்

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களின் நலன் கருதி நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார் சத்தினம் ஆகிய 3 இடங்களில் சிறப்பு ஸ்பாட் புக்கிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கல்லில் 10ஆயிரம் பேர், எருமேலியில் 2 ஆயிரம் பேர், வண்டிப்பெரியாறு சத்திரத்தில் 2 ஆயிரம் பேர் என தினமும் 14 ஆயிரம் பேருக்கு உடனடி தரிசன அனுமதி வழங்கப்படுகிறது.

தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் 80 ஆயிரம் பேர், உடனடி முன்பதிவு மூலம் 14 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 94ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர். சன்னிதானம் மற்றும் நடை பந்தலில் நெரி சலின்றி சுமூக மான தரிசனம் நடைபெற்று வருகிறது.

ஸ்பாட் புக்கிங் மையங்களுக்கு வரும் பக்தர்கள் தங்களது அசல் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனத் தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT