இந்தியா

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய்-கியாஸ் விநியோகத்தை அதிகரிக்க ரஷியா முடிவு

ரஷிய துணை பிரதமர் வருகைக்கு பின் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இந்திய எரிபொருள்-கியாஸ் தட்டுப்பாடு தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய்-கியாஸ் விநியோகத்தை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக ரஷிய துணை பிரதமர், இந்திய தலைவர்களை டெல்லியில் சந்தித்த பின்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா வந்துள்ள ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ், நேற்று முன்தினம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று அவர் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

எரிசக்தி ஆற்றல் துறை சம்பந்தமான பேச்சுவார்த்தை இந்த சந்திப்பில் முக்கிய இடம்பிடித்ததாக தெரிய வந்துள்ளது.

பின்னர் இது தொடர்பாக ரஷிய தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் "எண்ணெய் மற்றும் கியாஸ் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.இந்திய சந்தைக்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தை நிலையாக அதிகரிக்கும் திறன் ரஷிய நிறுவனங்களிடம் உள்ளது என்பதை டெனிஸ் மாந்துரோவ் உறுதிப்படுத்தினார்" என்று கூறப்பட்டு உள்ளது.

ஈரான் மீதான தாக்குதலால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வினியோகத்தில் தடங்கல்கள் உருவாகி உள்ளது. இது உலகளாவிய ஆற்றல் சந்தையில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு பிறநாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக ரஷியா அறிவித்து இருந்தது.

இந்தியாவின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய ஆதாரமாக மேற்கு ஆசியப் பிராந்தியம் இருந்து வரும் நிலையில், அங்கு ஏற்பட்ட தடைகளை தாக்குப்பிடிக்கும் வகையில் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் கிடைத்து வந்தது. இந்த நிலையில் ரஷியாவின் அந்த அறிவிப்பு இந்தியாவை மேலும் பாதிக்குமோ என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. இந்த நிலையில் ரஷிய துணை பிரதமர் வருகைக்கு பின் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இந்திய எரிபொருள்-கியாஸ் தட்டுப்பாடு தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்த சந்திப்புக்கு பின் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா-ரஷியா வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்புக் கான அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் கூட்டத்தில், இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டின் பல்வேறு முடிவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர்.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழல் உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்து ஜெய்சங்கரும், மாந்துரோவும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.