இந்தியா

'தேஹாதி' (கிராமத்தான்) என்பது அவமானம் அல்ல, அடையாளம்! ஸ்மார்ட்போனால் வாழ்க்கையை மாற்றிய உ.பி. பெண் யசோதா லோதி!

கிராமத்துக் பச்சை வயல்களின் பின்னணியில் அமர்ந்து கொண்டு, பலரின் வாழ்வில் உத்வேக விதைகளை விதைத்து வருகிறார் 'தேஹாதி மேடம்'.

ஒரு கிராமத்துப் பெண் என்றால் வயலில் வேலை செய்பவராகவோ அல்லது சமையலறையோடு முடங்கிப் போனவராகவோதான் பலருக்கும் நினைவுக்கு வரும்.

ஆனால், உத்தரப் பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த யசோதா லோதி என்ற பெண், தனது ஆங்கிலப் புலமையால் ஒட்டுமொத்த இணையதளத்தையே வியப்பில் ஆழ்த்தி, அந்தப் பொதுவான பிம்பத்தை உடைத்தெறிந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 7.25 லட்சத்திற்கும் அதிகமானப் பின்தொடர்பாளர்களைக் கொண்டு 'இங்கிலீஷ் வித் தேஹாதி மேடம்' என்ற கணக்கை நடத்தி வரும் யசோதாவின் இந்த உத்வேகப் பயணம் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

வறுமையும் கணவரின் விபத்தும் - வாழ்க்கையின் திருப்புமுனை

யசோதா லோதி உத்தரப் பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பஞ்சாபில் உள்ள ஒரு ஹிந்தி வழிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவருக்கு, ஆரம்பத்திலிருந்தே வறுமை ஒரு பெரிய தடையாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு இவரது கணவர் தினசரி 250 முதல் 300 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்தார்.

இந்தச் சூழலில், திருமணத்திற்காக வாங்கிய கடன் ஒருபுறம் இருக்க, எதிர்பாராத விதமாகக் கணவருக்கு நேர்ந்த விபத்தும், கோதுமை வயலில் ஏற்பட்ட தீ விபத்தும் இவர்களது குடும்பத்தைப் பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளியது. அப்போதுதான், "ஒரு பெண்ணாக நான் ஏன் என் குடும்பத்தைக் காப்பாற்றக் கூடாது? வீட்டில் இருந்தபடியே எப்படிப் பணம் சம்பாதிப்பது?" என்ற கேள்வி யசோதாவிற்குள் எழுந்தது.

ஸ்மார்ட்போன் தந்த புது வாழ்வு

கடந்த 2021-ஆம் ஆண்டு தீபாவளிக்குக் கிடைத்த ஒரு ஸ்மார்ட்போன் தான் இவரது வாழ்க்கையை மாற்றியது. ஆரம்பத்தில் யூடியூபில் சமையல், தையல் கலை போன்றவற்றைக் கற்றுக்கொண்ட யசோதா, அதன் மூலம் எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பதையும் தெரிந்துகொண்டார்.

முதலில் 'ரீ மோட்டிவேஷன்' என்ற பெயரில் ஊக்கமூட்டும் வீடியோக்களுக்குக் குரல் கொடுத்து வந்தவருக்கு, அதில் திருப்தி கிடைக்கவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக இல்லாமல், கிராமத்தில் இருந்துகொண்டு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தபோதுதான் ஆங்கிலம் கற்றுத்தரும் யோசனை பிறந்தது.

'தேஹாதி மேடம்' என்ற பெயர் ஏன்?

ஹிந்தியில் 'தேஹாதி' (Dehati) என்றால் 'கிராமத்தான்' அல்லது 'படிப்பறிவில்லாதவர்' என்று பலரும் கிண்டல் செய்யப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும். ஆனால், யசோதா அதைத் தனது பெருமையாக மாற்ற நினைத்தார். "இந்த வார்த்தையை ஒரு அவமானமாகப் பார்க்காமல், என் பலமாக மாற்ற விரும்பினேன். கிராமத்துப் பெண்ணாலும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டவே இந்தப் பெயரை வைத்தேன்" என்கிறார் யசோதா.

டிசம்பர் 2022-ல் தொடங்கப்பட்ட இவரது முதல் வீடியோவில் வார்த்தைகள் தடுமாறிய யசோதா, இன்று பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையுடன் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுத்து வருகிறார்.

மாறாத கிராமத்து வாழ்க்கை முறை & பிரியங்கா சோப்ராவின் பாராட்டு

யசோதாவின் ஆங்கில உச்சரிப்பும், எளிய முறையில் கற்றுத்தரும் பாணியும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், உலகப் புகழ்பெற்ற பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, யசோதாவின் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்த பிறகும் யசோதாவின் தினசரி வாழ்க்கையில் எந்த ஆடம்பரமும் நுழைந்துவிடவில்லை. ஆன்லைன் மூலம் ஆங்கில வகுப்புகள் எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், தினமும் அதிகாலையில் எழுந்து வீட்டைப் பெருக்குவது, பாத்திரங்கள் கழுவுவது மற்றும் குடும்பத்தினரோடு இணைந்து வயல் வேலைகளுக்குச் செல்வது போன்ற தனது அன்றாடப் பணிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "பிரியங்கா சோப்ரா மேடம் என் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பாராட்டிய செய்தியே எனக்கு உடனே தெரியவில்லை. நான் வழக்கம் போல வீட்டு வேலைகளையும், வயல் வேலைகளையும் முடித்துவிட்டு வந்தபோது என் மாணவர்கள் சொல்லிதான் இந்த இன்ப அதிர்ச்சியை நான் அறிந்தேன்" என்று எதார்த்தமாகத் தெரிவித்துள்ளார்.

வறுமையைக் கண்டு முடங்கும் பெண்களுக்கு ஒரு அரிய யோசனை

வறுமை அல்லது முறையான ஆங்கிலக் கல்வி இல்லாததால் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வழியில்லை என்று முடங்கிப் போகும் கிராமப்புறப் பெண்களுக்கு யசோதா ஒரு முக்கிய அறிவுரையைக் கூறுகிறார்.

"ஒரு கிராமத்துப் பெண் என்னிடம் வந்து, தன்னிடம் பணமோ அல்லது பெரிய பட்டப்படிப்போ இல்லை, தான் வாழ்க்கையில் மாட்டிக்கொண்டதாக உணர்கிறேன் என்று கூறினால், நான் அவளுக்குக் கொடுக்கும் முதல் ஆயுதம் அவளது கையில் இருக்கும் 'ஸ்மார்ட்போன்' தான்.

பெண்கள் பெரும்பாலும் குடும்பப் பொறுப்புகளுக்கு நடுவே தங்களின் சொந்தக் கனவுகளை மறந்து விடுகிறார்கள். ஆனால், இந்த டிஜிட்டல் உலகில் சமையல், தையல் கலை, கைவினைப் பொருட்கள் என உங்களுக்குத் தெரிந்த எந்தவொரு திறமையையும் நீங்கள் இணையம் மூலம் கற்றுக்கொள்ளவும், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் முடியும். கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் நாம் முன்னேறலாம்" என்று யசோதா லோதி நம்பிக்கையுடன் கூறுகிறார்.

எந்தவொரு முன் திட்டமிடலும் இன்றி, குடும்பத்தின் வறுமையைப் போக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக டிஜிட்டல் உலகிற்குள் நுழைந்த யசோதா, தனது கிராமத்து அடையாளத்தை மறைக்காமல் 'தேஹாதி மேடம்' என்ற பெயரிலேயே இன்று தனது சொந்தக் குரலால் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். கிராமத்துக் பச்சை வயல்களின் பின்னணியில் அமர்ந்து கொண்டு, இன்று பலரின் வாழ்வில் உத்வேக விதைகளை விதைத்து வருகிறார் இந்த 'தேஹாதி மேடம்'.

SCROLL FOR NEXT