Mumbai Corruption Cases Shock: 112 accused officials still in service 
இந்தியா

ஊழல் வழக்குகளில் தொடர்புடைய 112 அரசு அதிகாரிகள் இன்னும் பணியில் உள்ளனர்: RTI-ல் அதிர்ச்சி தகவல்

தகவல் அறியும் உரிமை சட்டம்

மும்பை மாநகராட்சியைச் சேர்ந்த 207 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புப் பணியகத்தின் தகவல் அறியும் உரிமை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

மேலும் அவர்களில், 112 பேர் இன்னும் பணியில் உள்ளதாகவும், 68 பேர் தங்கள் வழக்குகளுக்கு இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சி

மகராஷ்டிராவில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளின் சுயவிவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2026 ஏப்ரல் 30 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.

அரசு பணிகளில் ஊழியர்களில் 207 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 27 அதிகாரிகள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுமார் 87 சதவீதம் பேர், விசாரணை முடிவடையாத நிலையில் இன்னும் பணியில் உள்ளதாகவும், சில நபர்கள் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்

இதுகுறித்து தி யங் விசிலோப்ளவர்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜீதேந்திர கட்கே கூறுகையில், “ஒவ்வொரு ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கையும் முடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு இருக்க வேண்டும். ஊழல் வழக்குத் தொடர அனுமதிப்பது தொடர்பான முடிவுகள் உடனடியாக எடுக்கப்பட்டு, மேலும் ஊழல் வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கை முற்றிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.

மேலும், “ஊழல் தடுப்புப் பிரிவால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், விசாரணைகள் ஏன் இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன என்பது குறித்து மகாராஷ்டிர அரசும் சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளும் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கண்டுபிடிப்புகளின்படி, மும்பை மாநகராட்சி பொறியியல் துறைதான் ஊழல் வழக்குகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

மேலும் அதில், 33 துணைப் பொறியாளர்கள், 13 உதவிப் பொறியாளர்கள், 13 இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் பல மூத்த பொறியியல் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குகளில் நான்காம் நிலை ஊழியர்களான 48 துப்புரவுப் பணியாளர்கள், 24 கூலியாட்கள், 6 மேற்பார்வையாளர்கள், 6 பியூன்கள் மற்றும் பல களப் பணியாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ள மிகப் பழமையான ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு 2005-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. மேலும், சில சமயங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகியும் இறுதித் தீர்ப்பு எதுவும் எட்டப்படாமல் உள்ளது.

இது வெறும் தனிப்பட்ட லஞ்ச சம்பவங்களை மட்டுமல்ல, புலனாய்வு அமைப்பின் ஒரு கடுமையான தோல்வியையே பிரதிபலிக்கிறது என ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் வாதிட்டு வருகின்றனர்.

இவர்கள் மீது ஊழல் வழக்குத் தொடர அனுமதி இல்லாமல் குற்றவியல் நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுத்துச் செல்ல முடியாது. இந்த நிர்வாகத் தாமதங்களால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது அடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், தனிமைப்படுத்தல் மையங்களுக்கும் அவசர சேவைகளுக்கும் பணியாளர்கள் தேவைப்படுவதைக் காரணம் காட்டி, முன்னர் இடைநீக்கம் செய்யப்பட்ட 43 அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.