இந்தியா

அரசு அலுவலகத்தில் ரூ.2.31 கோடி பணம் சிக்கியது- 1 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல்

பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற அரசு அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு அரசுதுறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அலுவலக அறையில் பணம் மற்றும் தங்ககட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அங்கு அலமாரியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த பையினை திறந்து சோதனை மேற்கொண்டனர்.

அதில் கட்டுக்கட்டாக 2 கோடியே 31 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1 கிலோ தங்கக்கட்டிகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், அந்த பணம் மற்றும் தங்ககட்டிகளை பறி முதல் செய்தனர். அந்த பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.

அது லஞ்சப்பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தர விடப்பட்டு உள்ளது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக 7 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT