ஆழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், பொறியியல் புத்தாக்கங்கள் அல்லது ஆராய்ச்சித் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட, தொழில்துறைகள், பொருளாதாரங்கள் மற்றும் வாழ்க்கையை அடியோடு மாற்றியமைக்கும் ஆற்றலைக் கொண்ட, அதிநவீன மற்றும் பெரும்பாலும் புரட்சிகரமான தொழில்நுட்பங்களே ஆழ் தொழில்நுட்பம் (Deep tech) எனப்படுகின்றன.
இதியாவின் ஆழ் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் விதமாக தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடன் உதவி வழங்க முடிவு செய்தது. இதன் நோக்கில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை நிதியின் (RDI Fund) முதல் கட்டத்தில் 22 தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2,192 கோடி மதிப்பிலான மென்மையான கடன்கள் (Soft Loans) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. விண்வெளி, எரிசக்தி, செமிகண்டக்டர், மருத்துவம் உள்ளிட்ட முன்னேறிய தொழில்நுட்பத் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிறுவனங்களை தேர்வு செய்ய 12 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு 124 விண்ணபங்களை ஆய்வு செய்து, 22 நிறுவனங்களை தேர்வு செய்தது. இந்த 12 நிறுவனங்களுக்கு 2,192 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில்தான் நலன் முரண்பாடு (Conflict of Interest) குறித்த கேள்வி எழுந்துள்ளது. 22 நிறுவனங்களைத் தேர்வு செய்த 12 பேர் கொண்ட முதலீட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த 7 உறுப்பினர்களுடன், நிதிபெற்ற 15 நிறுவனங்களுக்கு முதலீட்டு அல்லது தொழில் ரீதியான தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 15 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1,377 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குழுவின் தலைவர் சௌரப் ஸ்ரீவாஸ்தவாவுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் பல தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. அதேபோல், குழுவின் பிற உறுப்பினர்களுக்கும் சில பயனாளி நிறுவனங்களில் பங்குகள் அல்லது முந்தைய தொழில் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த குழு உறுப்பினர்கள், தங்களுடைய நலன்கள் முன்கூட்டியே அரசிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், தொடர்புடைய நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் முடிவெடுப்பு நடவடிக்கைகளில் தாங்கள் விலகியதாகவும் கூறியுள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், நிறுவனங்கள் தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டதாகவும், நலன் முரண்பாடு கொண்ட உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம், பொதுநிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை, நலன் முரண்பாடுகளைத் தவிர்த்தல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்தல் ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.