ராம்லீலா மைதானம்  
இந்தியா

1 நாளைக்கு ரூ.1.21 லட்சம்.. இந்த ஆண்டு 3 நாட்கள் மட்டுமே முன்பதிவு இருக்கு - போராட்டத்தை ஒடுக்கவே ராம்லீலா மைதானம் ஒதுக்கப்பட்டதா?

1930 வரை இது ஒரு குளமாக இருந்தது. பின்னர், இது நிரப்பப்பட்டு சமவெளியாக மாற்றப்பட்டது.

டெல்லியில் போராட்டத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்ட ராம்லீலா மைதானம் விவாதப்பொருளாகி வருகிறது.

போராட்டங்களுக்கு புகழ்பெற்ற டெல்லி ஜந்தர் மந்தர் திடலில் இனி போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது என டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அதற்கு பதிலாக ராம்லீலா மைதானத்தில் போராட்டங்களை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ராம் லீலா மைதானம் மிகவும் காஸ்ட்லி என்றும் இந்த ஆண்டு வெறும் 3 நாட்கள் தான் அங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

3 நாட்கள் மட்டுமே

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதும், 50,000 பேர் அமரும் திறன் கொண்டதுமான இந்த மைதானத்தை, இந்த ஆண்டு டிசம்பர் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

தீபாவளி, தசரா போன்ற முக்கியப் பண்டிகைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் வரவிருப்பதால், இந்த மைதானம் தற்போது முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1.21 லட்சம்

1 நாளைக்கு ரூ.1.21 லட்சம் மைதானத்தின் தினசரி வாடகை ரூ. 50,000 ஆகும். திரும்பப் பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையான ரூ. 55,000 மற்றும் வரிகள் உட்பட, ஒரு நாளுக்கான செலவு சுமார் ரூ. 1.21 லட்சமாக இருக்கும்.

போராட்டம்

போராட்டங்களுக்காக ஒரு சிறிய பகுதி இலவசமாக ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதில் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். கடந்த காலங்களில் போராட்டங்கள் நடைபெற்ற ஜந்தர் மந்தரில் இதுபோன்ற கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை.

அனுமதி

இருப்பினும், ஜந்தர் மந்தரைப் போலவே, ராம்லீலா மைதானத்தில் உள்ள இலவசப் போராட்ட இடத்திற்கும் அனுமதி தேவைப்படுகிறது.

டெல்லி மாநகராட்சியின் தோட்டக்கலைத் துறையால் இந்த மைதானங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மாநகராட்சி வாரியத்திடம் அனுமதி பெறுவதற்கு முன்பு, டெல்லி காவல்துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.

காவல்துறை ஆணையரின் உத்தரவின்படி, ஜந்தர் மந்தரைத் தவிர்த்து, கிழக்கு டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் சிபிடி மைதானம் ஆகியவை புதிய போராட்ட மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ராம்லீலா மைதான நெருக்கடி

ராம்லீலா மைதானம் ஒரு பரபரப்பான வணிகப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகில் மூன்று மருத்துவமனைகளும் மாநகராட்சித் தலைமையகமும் உள்ளன. பெரிய நிகழ்வுகளின் போது இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைபடுகிறது.

1930 வரை இது ஒரு குளமாக இருந்தது. பின்னர், இது நிரப்பப்பட்டு சமவெளியாக மாற்றப்பட்டது. 1932 முதல் இங்கு வருடந்தோறும் ராமலீலா நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு, 1951ல் பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்காக இந்தப் பகுதி மேம்படுத்தப்பட்டது.

போராட்டங்களை மறைமுகமாக ஒடுக்க அரசின் புதிய யுக்திகளில் ஒன்றாக இந்த மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

விமர்சனம்

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் தேர்வு மோசடிகளுக்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் மத்திய கல்வி அமைச்சரின் ராஜிநாமாவுக்கு வழிவகுத்தது.

தற்போது தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகள் வந்துள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்றபோது கிட்டத்தட்ட 7000 பேரை டெல்லி காவல்துறை கைது செய்து பின்னிரவில் விடுவித்தது.

அங்கு போராட்டம் நடத்த சிஜேபி மீண்டும் கோரி வந்த நிலையில் அந்த இடமே போராட்டங்களுக்கு மூடப்பட்டுள்ளது மத்திய பாஜக அரசின் அச்சத்தை வெளிப்படுத்துவதாக சு.வெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் விமர்சித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT