தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மெடிபள்ளியில் பிரபல நகை கடை உள்ளது.
நேற்று முன் தினம் இரவு 6 பேர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பல் நகைக்கடைக்கு வந்தனர். அதில் ஒருவர் கடைக்கு வெளியே நின்று யாராவது வருகிறார்களா என கண்காணித்தார். மற்றொருவர் பெரிய துணியால் கடையை மறைத்துக் கொண்டார். மற்ற 4 பேர் தாங்கள் கொண்டு வந்த பொருட்களைக் கொண்டு கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் கடையில் இருந்த தங்க, வைர நகைகளை 2 பைகளில் போட்டுக்கொண்டு தப்பி சென்றனர். கொள்ளை கும்பல் கடைக்கு வருவது முதல் தப்பிச் செல்வது வரை கடைக்கு வெளியே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இது குறித்து கடையின் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.