மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகாலம் ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரசின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. பாஜக 208 இடங்களைக் கைப்பற்றி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
குறிப்பாக ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவமகள் அபயாவின் தாயார் ரத்னா தேவநாத் பாஜக சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட பானிஹட்டி தொகுதியில், பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ரத்னா தேவநாத் 87,977 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தீர்த்தங்கர் கோஷை 28,836 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸின் நிர்மல் கோஷ் வசமிருந்த இந்தத் தொகுதி, தற்போது ரத்னா தேவநாத்தின் வெற்றியின் மூலம் பாஜக வசம் வந்துள்ளது.
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் அபாயா, சஞ்சய் ராய் என்பவனால் கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
குற்றாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு அவனுக்கு உடனடியாக ஆயுள் தண்டனை பெற்றுத்தரப்பட்டபோதிலும் இந்த சம்பவம் மம்தா ஆட்சியில் கரும்புள்ளியாக மாறியது.
தனது மகளுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு நீதி கேட்டுப் போராடிய ரத்னா தேவநாத் பாஜகவில் இணைந்து தற்போது எம்எல்ஏ ஆகியுள்ளது கவனம் பெற்றுள்ளது.