இந்தியா

பாலமூர் பாசனத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த ரேவந்த் ரெட்டி உத்தரவு!

"இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தெற்கு தெலங்கானாவின் வறட்சி பாதித்த பகுதிகளில் சுமார் 12.3 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்."

தெலங்கானா முதலமைச்சர் அ.ரேவந்த் ரெட்டி, பாலமூர் பகுதியில் நடைபெற்று வரும் முக்கிய பாசனத் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, பாலமூர்–ரங்காரெட்டி லிஃப்ட் பாசனத் திட்டம் தொடர்பான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மகபூப்நகர் மாவட்டத்தின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், திட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தினார். இதற்குத் தேவையான நிதியை மாநில அரசு உடனடியாக வழங்கும் என்றும், நிலுவையில் உள்ள பாசனத் திட்ட பில்களும் விரைவில் செலுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், பாலமூர் பகுதியில் நடைபெறும் பிற பாசனத் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும் எனவும், மாவட்ட அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தெற்கு தெலங்கானாவின் வறட்சி பாதித்த பகுதிகளில் சுமார் 12.3 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி, குடிநீர் வழங்கல் மற்றும் தொழில்துறை நீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. பாலமூர்–ரங்காரெட்டி பாசனத் திட்டத்தை விரைவில் முடித்தால், மகபூப்நகர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் நீர்ப்பாசன பிரச்சனை, குடிநீர் வழங்கல் மற்றும் தொழில்துறைக்கான நீர் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.