அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் (ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை) முதல் தலைமைச் செயல் அதிகாரியாக ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தியில் நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இப்பதவிக்காக பெறப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக்குழு இறுதியாக இவரை தேர்வு செய்துள்ளது.
ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சமீபத்தில் கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, நிர்வாக வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த சிஇஓ பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய சிஇஓ கோயிலின் ஒட்டுமொத்த நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள், கூட்ட நெரிசல் மேலாண்மை, பணியாளர்கள் மற்றும் நிதிச் செயல்பாடுகளைக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்மீக மற்றும் மத சடங்குகளில் அவர் தலையிட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறக்கட்டளையின் இடைக்காலப் பொதுச் செயலாளர் கிருஷ்ண மோகனுக்குப் பதிலாக, தற்போது அதன் பொருளாளராக இருக்கும் கோவிந்த் தேவ் கிரி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ் பக்சந்த்கா புதிய பொருளாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் அறக்கட்டளையின் நன்கொடை கையாடல் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அதன் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க இந்த பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சம்பத் ராய் ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் இரண்டு அறங்காவலர்களும் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், சுவாமி கமல்நாயன் தாஸ், தற்காலிக பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ண மோகன், அறங்காவலர் மஹந்த் தினேந்திர தாஸ், பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி உள்ளிட்டோர் கலந்து ஒரு கூட்டத்தைக் கூட்டி இந்த சிஇஓ பதவியை கொண்டு வந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா பல்வேறு விருதுகளைப் பெற்ற ஒரு ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். 38 ஆண்டுகளாக விமானப்படை பிரிவில் பணியாற்றியுள்ளார்.
இவர்தான் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் போது இந்தியாவின் மேற்கு விமானப் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.