நிலவில் ஆய்வு தளம் அமைக்கும் தனது பிரம்மாண்ட திட்டத்தில் இணைய இஸ்ரோவிற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா அழைப்பு விடுத்துள்ளது.
ஆக.5 மற்றும் 6ம் தேதிகளில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நடைபெற்ற 9-வது இந்தியா - அமெரிக்கா சிவில் விண்வெளி கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்கள் தங்கி நீண்ட காலம் ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு நிரந்தர ஆராய்ச்சி மையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. இது மனிதகுலத்தின் அடுத்த மாபெரும் விண்வெளி பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.
நிலவின் தென்துருவத்தில் வெற்றிக்கரமான கால்பதித்த முதல் நாடு இந்தியா. குறைந்த செலவில் துல்லியமாக விண்கலங்களை ஏவும் இஸ்ரோவின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள நாசா விரும்புகிறது.
இந்தியா ஏற்கனவே 2023-ல் அமெரிக்காவின் 'ஆர்டெமிஸ் ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த மூன் பேஸ் திட்டத்தின் மூலம் இரு நாடுகளின் விண்வெளி உறவு அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.