இந்தியா

டெல்லியில் பிரபல பத்திரிகை அலுவலகத்துக்கு சீல் - தாக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்கள்? - வலுக்கும் கண்டனம் | UNI

போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் பெண் செய்தியாளர்கள் உட்பட அனைவரையும் உடல் ரீதியாகத் தாக்கி வெளியேற்றியதாக குற்றம்சாட்டி உள்ளது.

மாலை மலர்

டெல்லியில் உள்ள பிரபல செய்தி நிறுவன அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ராபி மார்க்கில் உள்ள யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியா (UNI) செய்தி நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைக்கப்ட்டது.

நீதிமன்ற உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றப்படுவதற்கு முன்பே, போலீசாரும் துணை ராணுவப் படையினரும் அலுவலகத்திற்கு வந்து, பணியில் இருந்த பெண் ஊழியர்கள் உட்பட அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய பத்திரிகையாளர் கூட்டமைப்பு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் செய்தியாளர்களை உடல் ரீதியாகத் தாக்கி வெளியேற்றியதாகவும், அவர்கள் தங்களது சொந்தப் பொருட்களைக் கூட எடுக்க அனுமதிக்கவில்லை என்றும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பதுடன், பெண் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு விடப்பட்ட சவாலாகும் என்று இந்திய மகளிர் பத்திரிகையாளர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பழமையான மற்றும் மதிப்பிற்குரிய ஒரு செய்தி நிறுவனத்தின் செய்தி அறையில் இத்தகைய காட்சிகள் அரங்கேறியது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை ஊடக சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் சாடியுள்ளது.