சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதில் "நிம்மதியும் நன்றியும்" அடைந்துள்ளதாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) தெரிவித்துள்ளது; அதேவேளையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை டெல்லியின் ஜந்தர் மந்தரில் தங்கள் அமைதியான போராட்டம் தொடரும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் டிப்கே, "சோனம் ஐயா 26 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதில் நாங்கள் நிம்மதியும் நன்றியும் கொள்கிறோம். உங்கள் அசாத்தியமான துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் நன்றி ஐயா.
உங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் நீங்கள் தட்டி எழுப்பினீர்கள். இந்த நாட்டிற்கு உங்கள் உயிர் மிகவும் விலைமதிப்பற்றது. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யின் அமைதியான போராட்டம் தொடரும்," என்று டிப்கே கூறினார்.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அவரது முக்கிய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, வாங்சுக் வியாழக்கிழமை இரவு தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "சோனம் ஜி மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது அன்றாட நடைமுறைகளை பின்பற்றி, விரைவில் தனது உடல் எடையை மீட்டெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சோனம் ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்," என்றும் பிரதமர் கூறினார்.