நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக, எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கிணங்க குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு இது பொருந்தாது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும் இந்தப் போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளையும் டெல்லி அரசு முடித்து வைத்துள்ளது. இப்போராட்டம் தொடர்பாக ஏற்கனவே கைது அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களை, உரிய ஆய்வுக்குப் பிறகு விரைவாக விடுதலை செய்ய டெல்லி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் இதோடு முடித்துக் கொள்ளப்படுவதாகவும், இது தொடர்பாக எதிர்காலத்தில் எந்த விசாரணையோ அல்லது தொடர் நடவடிக்கைகளோ இருக்காது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நீட்- யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் சமீபத்தில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பு சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன்.20 முதல் போராட்டம் தொடங்கியது.
போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததையடுத்து, ஜூலை.25 முடிவுக்கு வந்தது. இதனிடையே இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து, சிலரை கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறவேண்டும் எனவும், இல்லையென்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என கரப்பான்பூச்சி அமைப்பு எச்சரித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறை ரத்து செய்துள்ளது.