கடந்த ஆண்டு செங்கோட்டை பகுதியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் மட்டுமே இன்னும் பிடிபடாமல் உள்ளார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது என்றும் தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அகர்வால் தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளும் தொடங்கிவிட்டதாக அவர் கூறினார்.
"செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கை பொறுத்தவரை, விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளும் தொடங்கிவிட்டன. பாகிஸ்தானில் இருக்கலாம் என்று கருதப்படும் ஒருவரைத் தவிர, வேறு யாரும் பிடிபடாமல் இல்லை," என்று செய்தியாளர்களிடம் அகர்வால் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கருதப்படும் நபரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், ஆப்கானிஸ்தானுக்கு தப்பி சென்று, பின்னர் அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் டாக்டர் முசாஃபர் ராதர், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருபவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை கண்டறிந்ததே ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தான்.
கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியன்று, தலைநகர் டெல்லியின் செங்கோட்டை பகுதியில், வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்; மேலும், பெரும் சொத்து சேதமும் ஏற்பட்டது.
டெல்லி காவல்துறையிடம் இருந்து இந்த வழக்கின் விசாரணையை தன்வசப்படுத்திய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), இந்த ஆண்டு மே மாதம், டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், 10 பேர் மீது 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.