காங்கிரஸ் எம்எபி ராகுல் காந்தியை பாராட்டி இளைஞர் காங்கிரசார் நிஜ வாழ்க்கையின் ‘பேட்மேன்’ என்று அவரை புகழ்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர் ஒட்டியுள்ளது.
டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் சாஹில் லோச்சவ் வக்கீலுடன் சென்று புகார் அளித்தும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி டெல்லி பாராளுமன்ற வீதியில் உள்ள துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்ட இளைஞருடன் சென்று எப்.ஐ.ஆர். பதிவு செய்து அந்த நகலை அளிக்குமாறு வலியுறுத்தினார்.
அவரது கோரிக்கை ஏற்கப்படாததை தொடர்ந்து துணை கமிஷனர் அலுவலகம் முன்பு ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தநிலையில் ராகுல்காந்தியை பாராட்டி இளைஞர் காங்கிரசார் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர். நிஜ வாழ்க்கையின் ‘பேட்மேன்’ என்று அவரை புகழ்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.
ராகுல்காந்தியின் படமும், ‘பேட்மேன்’ படமும் அதில் இடம் பெற்றுள்ளது. அமைதியான பாதுகாவலர், டெல்லியின் பாதுகாவலன் என்ற வாசகம் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. ராகுலின் செயலை பாராட்டி இந்த போஸ்டரை அச்ச டித்து வெளியிட்டு உள்ளனர்.