இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“ராகுல் காந்தியிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், நீங்கள் ஏன் இவ்வளவு பாரபட்சமாக நடந்து கொள்கிறீர்கள்? காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அரசுகள் ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு தொடர்பாக ராகுல் காந்தி பேசாதது ஏன்?
மாணவர்களின் நலனோ அல்லது கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோ உங்கள் நோக்கம் அல்ல என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேடவே முயற்சிக்கிறீர்கள்.
இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அது குறுகிய நேர விவாதமாக இருந்தாலும் சரி, நீண்ட நேர விவாதமாக இருந்தாலும் சரி, எவ்வளவு நேர விவாதம் என்பதை எதிர்க்கட்சியே தீர்மானிக்கலாம். 12 மணி நேரம் வேண்டுமானால், நாங்கள் தயாராக இருக்கிறோம். 18 மணி நேரம் வேண்டுமானால், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
குழந்தைகள் நம் அனைவருக்கும் சொந்தமானவர்கள். அவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பது இரு தரப்பினரின் பொறுப்பாகும்.
சிஜேபி கட்சியினரின் கருத்துக்களை மிகவும் நிதானமாகக் கேட்டோம். அவர்களின் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு நான் பரிந்துரைத்தேன், அவர்களும் அவ்வாறே செய்துள்ளனர். மேலும், அவர்கள் விரும்பும் போதெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்களிடம் கூறியுள்ளேன்.” என தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி,
கடந்த பத்தாண்டுகளில் 152 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதனால் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் இந்தியக் குடும்பங்கள் ஆண்டுதோறும் தேர்வுகளுக்காக 1.32 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகின்றன என்றும் தெரிவித்திருந்தார்.