இந்தியா

வாக்கு சீட்டு முறையில் போட்டியிட தயார்.. ஆனால் ஒரு கண்டிஷன் - காங்கிரசுக்கு ஹிமந்தா சவால்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எஸ்ஐஆர் நடத்தப்பட வேண்டும்

கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகள் ராஜினாமா செய்தால், வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று பாஜகவை சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா காங்கிரசுக்கு சாவல் விடுத்துள்ளார்.

வாக்கு திருட்டு, எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்ததாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றம்சாட்டி காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று உச்சநீதிமன்றம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியினர் பேரணி நடத்தினர். முன்னதாக கடந்த வாரம் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்ற அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தேர்தலில் இவிஎம் மின்னணு வாக்குபதிவு முறையை விடுத்தது வாக்கு சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்பது இந்தியா கூட்டணியின் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

ஹிமாந்தா சவால்

இந்த சூழலில் அசாம் தலைநகர் கௌஹாத்தியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹிமந்தா, ""ராகுல் காந்தியும் காங்கிரஸும் தங்கள் அரசாங்கங்களை ராஜினாமா செய்ய வைக்க தயாராக இருந்தால், நான் வாக்குச்சீட்டு மூலம் தேர்தலில் போட்டியிடத் தயார்.

கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா அரசாங்கங்களும் ராஜினாமா செய்ய வேண்டும். ஏனென்றால், அவர்கள் கூற்றுப்படி ஞானேஷ் குமார் தலைமையில் நடந்த வாக்கு மோசடியால்தான் அவை அமைக்கப்பட்டன" என தெரிவித்தார்.

காங்கிரஸிடம் ஆட்கள் இல்லை

டெல்லியில் ஒரு போராட்டத்தை நடத்துவதற்குக் கூட காங்கிரஸிடம் போதுமான ஆட்கள் இல்லை என்றும், போராட்டத்திற்காக அசாம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மக்களை அழைத்து செல்கின்றனர் என்றும் ஹிமந்தா காங்கிரஸைக் கிண்டல் செய்தார்.

எஸ்ஐஆர் தேவை

மேலும் , "நாட்டில் எஸ்ஐஆர் தேவை. சட்டவிரோத குடியேற்றத்தால் அசாம், மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பு மாறியுள்ளது. எனவே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எஸ்ஐஆர் நடத்தப்பட வேண்டும்" என அவர் வலியறுத்தினார்.

SCROLL FOR NEXT