தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் சேர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, இந்தியா கூட்டணி சார்பில் வருகிற 1-ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்த இருக்கிறது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில் "வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க, நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட நான் தயாராக இருக்கிறேன். ஆனால், ராகுல் பாபா ஒருபோதும் சம்மதிக்கமாட்டார். அவர் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை ஒருபோதும் விவாதிக்க மாட்டார், மாறாக தெருவில் கலவரத்தை உருவாக்குவார்.
ராகுல் (காந்தி) மற்றும் அகிலேஷ் (யாதவ்) ஆகியோருக்கு நான் சவால் விடுக்கிறேன். எழுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டு குறித்தும் நாடாளுமன்றத்திற்குள் விவாதிக்க முன்வாருங்கள். தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ஆனால், அவர்கள் விவாதத்தை விரும்பவில்லை. மாறாக, வீதிகளில் நாடகம் நடத்தவே விரும்புகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.