இந்திய ரிசர்வ் வங்கி தனது முதல் காகிதப் பணத்தாளை 1938-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டது. அது ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நோட்டாகும்.
அப்போது அறிமுகம் செய்யப்பட்ட பருத்தி அடிப்படையிலான காகிதப் பணத்தாள்களை இன்று வரை மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து புழக்கத்தில் விட்டு வருகிறது.
இந்த காகித நோட்டுகள் விரைவாக சேதமடையும் நிலையில் உள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு அழிக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கிறது.
மேலும் புழக்கத்தில் இருந்து அகற்றப்படும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளில், ரூ.100 மற்றும் ரூ.500 போன்ற உயர் மதிப்பு நோட்டுகள் பெரும் பங்கைக் கொண்டுள்ளன.
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளுக்கு காகித கள்ள நோட்டுகள் மேலும் ஒரு கவலையாகவே இருந்து வருகின்றன.
பாரம்பரிய காகிதப் பணத்தைக் காட்டிலும் பிரதி எடுப்பதற்கும் முப்பரிமாணப் படங்கள் உள்ளிட்டவைகளை இணைப்பதற்கும் ஏற்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவையாக பாலிமர் நோட்டுகள் இருந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு பழமையான காகிதப் பணத்திற்குப் பதிலாக பாலிமர் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு பரிசிலித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலிமர் நோட்டுகள் பரிசீலனையில் உள்ளது. நாங்கள் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து வருகிறோம். இது ஆரம்பகட்ட நிலையில் உள்ளது” என்று கூறினார்.