RBI
இந்தியா

கடன் வட்டி விகிதங்களில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியீடு!

பழைய கடன்களை புதிய விதிமுறைகளின் கீழ் மாற்றுவதற்கு ஏப்ரல் 1, 2029 வரை ஒருமுறை மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும்

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்களின் நலனைப் பாதுகாக்கவும், வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் இந்திய ரிசர்வ் வங்கி புதிய வரைவு விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது.

இந்த புதிய விதிகள் இறுதி செய்யப்பட்டு, வரும் ஏப்ரல் 1, 2027 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன.

இந்த புதிய விதிகள் பொதுத்துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் NBFC எனப்படும் பொதுத்துறை அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும் என RBI அறிவித்துள்ளது.

முக்கிய மாற்றங்கள் என்னென்ன?

வட்டி கணக்கிடும் முறையில் மாற்றம்:

இனிமேல் கடன்களுக்கான வட்டி, நடப்பு மாதத்தின் அடிப்படையில், தினசரி குறையும் நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு வசூலிக்கப்பட வேண்டும்.

வட்டி விகிதத்தை மாற்ற புதிய கட்டுப்பாடுகள்:

அனைத்து வங்கிகளும் தங்களின் மிதக்கும் வட்டி விகிதத் தனிநபர் கடன்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்களை கட்டாயமாக வெளிப்புறக் குறியீட்டுடன் இணைக்க வேண்டும்.

இதில் RBI-ன் ரெப்போ ரேட் அல்லது அரசிடம் இருக்கும் கருவூலப் பத்திரங்களின் லாப வரம்பு ஆகியவை குறியீடாகப் பயன்படுத்தப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட இந்தக் குறியீட்டு அளவுக்குக் குறைவாக எந்த வங்கிக் கடனுக்கும் வட்டி வசூலிக்கக் கூடாது.

மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றம்:

வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும் கால அளவு 3 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விவசாயக் கடன்களுக்கு மட்டும் பயிர் காலத்தைக் கணக்கில் கொண்டு அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணங்களுக்குக் கடிவாளம் :

வங்கிகள் கடனுக்காக வசூலிக்கும் கூடுதல் வட்டி வரம்பு , வாடிக்கையாளரின் கடன் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இதர கட்டணங்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வங்கிகள் மாற்றியமைக்க முடியும்.

ஏழை மற்றும் சிறு விவசாயிகளுக்குப் பாதுகாப்பு:

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான மொத்த வட்டியும், இதர கூடுதல் கட்டணங்களும், அவர்கள் வாங்கிய அசல் தொகையை விட ஒருபோதும் அதிகமாக இருக்கக் கூடாது என RBI நிபந்தனை விதித்துள்ளது.

பழைய கடன்களுக்கு என்ன விதிமுறை?

தற்போது செயல்பாட்டில் இருக்கும் பழைய கடன்களை புதிய விதிமுறைகளின் கீழ் மாற்றுவதற்கு ஏப்ரல் 1, 2029 வரை ஒருமுறை மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும்.

இதற்கு வாடிக்கையாளர்களின் ஒப்புதல் கட்டாயம். மேலும், பழைய கடனிலிருந்து புதிய முறைக்கு மாறுவதற்கு வாடிக்கையாளர்களிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும், வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடாது என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது