ஊழல் வழக்கில் கைப்பற்றப்பட்ட லஞ்சப் பணத்தை "எலிகள் கடித்துத் துவம்சம் செய்துவிட்டன" என்ற விசித்திரமான வாதத்தை முன்வைத்த பீகார் மாநில அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி அருணா குமாரி ரூ.10,000 லஞ்சம் பெற்ற புகாரில் சிக்கினார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ரூ.10,000 ரொக்கப்பணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், அந்தப் பணத்தை ஸ்டோர் ரூமில் இருந்த எலிகள் கடித்துச் சிதைத்துவிட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்தது.
லஞ்ச பணம் தான் இந்த வழக்கில் முக்கிய ஆதாரம் என்றும் அந்த பணம் இல்லாததால் கீழ் நீதிமன்றம் அருணா குமாரியை விடுவித்தது.
ஆனால் மேல்முறையீட்டில் பாட்னா உயர் நீதிமன்றம், லஞ்சப் பணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும், பதிவேடுகளில் உள்ள தகவல்களைக் கொண்டு தண்டனை வழங்கலாம் என்று கூறி, அவருக்கு 3 முதல் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து அருணா குமாரி உச்சநீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன், லஞ்சப் பணம் முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் எப்படி ஒருவருக்குத் தண்டனை வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும் வரை அருணா குமாரியின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
என்பவர் மீதான லஞ்ச வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, சில போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கிலோக்கணக்கான கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன என்று காவல்துறை வாதிட்ட சம்பவங்கள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தின.
தற்போது லஞ்சப் பணத்தையும் எலிகள் விட்டுவைக்கவில்லை என்று இணையத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.