மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் போரிவலி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மசாலா தோசைக்குள் செத்த எலி இருந்ததை கண்ட வாடிக்கையாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து, மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஓட்டலின் வணிக உரிமத்தை இடைநீக்கம் செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமித் திரிவேதி என்பவர் தனது 2 சகோதரர்கள் மற்றும் மகனுடன் தென்னிந்திய உணவு உண்பதற்காக ஒரு ஓட்டலுக்குச் சென்றார். அங்கு அவர் மைசூர் மசாலா தோசை ஒன்றை ஆர்டர் செய்தார். தோசையை சில வாய் சாப்பிட்ட பிறகு, உணவுக்குள் ஏதோ வித்தியாசமாக இருப்பதை கவனித்துள்ளார்.
சாப்பிட்ட உணவை பார்த்தபோது அதற்குள் சிறிய இறந்த எலி இருப்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவர் போரிவலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திரிவேதி அளித்த புகார், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதை தொடர்ந்து, ஓட்டலின் உணவு வணிக உரிமத்தை FDA இடைநீக்கம் செய்தது. உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டே தலைமையில் மகாராஷ்டிராவில் தீவிரப்படுத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு அமலாக்க நடவடிக்கைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் முண்டே பொறுப்பேற்றதிலிருந்து, உணவகங்கள், ஓட்டல்கள், உணவு உற்பத்தியாளர்கள், பால் பண்ணைகள் மற்றும் பிற உணவு வணிகங்களில் துறை தனது ஆய்வுகளை கணிசமாக அதிகரித்துள்ளது.