கேரள மாநிலம் பாலக்காடு அருகே நான்கு கண்களுடன் கூடிய விசித்திரமான தேங்காய் ஒன்றை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்லும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான இவரது வீட்டுத் தோட்டத்தில் பல தென்னை மரங்கள் உள்ளன. வழக்கம்போல, இவரது தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட தேங்காய்களை உரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு குறிப்பிட்ட தேங்காயை உரித்த போது அது மற்ற தேங்காய்களை விட வடிவம் மற்றும் அமைப்பில் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பொதுவாக ஒரு தேங்காய்க்கு மூன்று கண்கள் மட்டுமே இருப்பது இயற்கை. ஆனால், இந்த விசித்திரமான தேங்காயின் வெளிப்புறத்தில் 4 கண்கள் தெளிவாகக் காணப்பட்டன.
அதோடு மட்டுமின்றி, அந்தத் தேங்காயை உடைத்துப் பார்த்தபோது மற்றொரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்தத் தேங்காயின் உள்புறத்தில் 2 சிறிய குட்டி தேங்காய்கள் முழுமையாக வளர்ந்த நிலையில் காணப்பட்டன. இந்த அபூர்வ நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசித்திரமான தேங்காய் குறித்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, மண்ணம்பட்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஜெயராமின் வீட்டிற்குத் திரண்டு வந்து, இந்த அதிசய தேங்காயை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
மேலும், இந்த அபூர்வ தேங்காயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.