உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையின்போது, இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடை பணம், பொருட்கள் திருடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கில் பணம் திருடப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஜூன் 25-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராயின் முன்னாள் ஓட்டுநர் ராமஷங்கர் மிஸ்ராவும் அடங்குவார். இவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சம்பத் ராய் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நன்கொடை திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டது. சிறப்பு விசாரணைக்குழு (SIT) விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கு எதிராக மனுதாரர்களை எச்சரித்தார். மேலும், இவ்வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணையை மேற்கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) மறுசீரமைக்க முடியுமா? என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரப் பிரதேச அரசிடம் கேட்டுள்ளது.
மனுதாரர்கள் உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை வேண்டும். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டு்ம என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த விசாரணையின்போது உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ராமர் கோவில் நன்கொடை திருட்டு தொடர்பான நிலை அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார். அத்துடன் இதற்கு மேல் விரிவாக என்றால் கூற இயலாது என்றார்.
நிலை அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தபோது, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மூலம் விசாரணை நடைபெறுகிறதா என்று நீதிபதி சூர்ய காந்த் வினவினார்.
அதற்குப் பதிலளித்த மேத்தா, ஆரம்பக்கட்டப் பரிசீலனை சிறப்பு புலனாய்வுக் குழுவால் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது இவ்வழக்கை காவல்துறை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், "உண்மையை கண்டறியவே ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலான குற்றம் (cognizable offence) நிகழ்ந்துள்ளதாக அக்குழு கண்டறிந்துள்ளது" என்றார்.
இதையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணையை மேற்கொள்ளலாம் என்று கூறிய நீதிபதிகள் அமர்வு, ஒரு மூத்த அதிகாரியின் தலைமையில் அக்குழுவை மறுசீரமைக்க முடியுமா என்றும் கேட்டனர்.
அத்துடன் "நாங்கள் ஒரு எச்சரிக்கையை மட்டுமே விடுக்கிறோம். இப்பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம். விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்று, தர்க்கரீதியான முடிவை எட்ட வேண்டும்" என்றார் தலைமை நீதிபதி சூர்ய காந்த்.
நிலை அறிக்கையை பரிசீலிக்க மூன்றிலிருந்து நான்கு நாட்கள் தேவைப்படும் என்று கூறிய நீதிபதிகள் அமர்வு, அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. "அப்போது சில உத்தரவுகளைப் பிறப்பிப்போம்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இன்றைய வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜெய்மல்யா பாக்சி, வி. மோகனா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.