நட்டா, கார்கே  
இந்தியா

என்னைத் தீண்டத்தகாதவனாக நடத்துகிறீர்கள்.. மாநிலங்களவையில் கொந்தளித்த கார்கே - என்ன நடந்தது?

என்னைத் தீண்டத்தகாதவராக நடத்தி, மேடையைச் 'சுத்தம்' செய்து அவமானப்படுத்துகிறீர்கள்.

இன்று மழைக்கால கூட்டத்தோரின் கடைசி நாள். மக்களவை தொடங்கியதும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றுவது உள்ளிட்ட மசோதாக்கள் மீது இன்று மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தன்னைப் பற்றிய சர்ச்சை ஒன்றை எழுப்பியதால் அவை பரபரப்படைந்தது.

சம்பவம்

ஆகஸ்ட் 8 அன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தவானியில் ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசினார். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஸ்ரீ ராம் சேனா தர்மார்த் சேவா நியாஸ் சங்கட்டன் என்ற இந்துத்துவா அமைப்பு ஒன்று மேடையில் ஹோமம் ஒன்றை நடத்தியது.

ராம்லீலா மைதானம் ஆன்மீகப் புனிதம் வாய்ந்தது என்பதால், அதை அரசியல் கூட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கும், அக்கூட்டத்தில் சனாதன தர்மத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த சடங்கு நடத்தப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறினர்.

மாநிலங்களவையில் கார்கே

இந்த விவகாரம் குறித்து இன்று மாநிலங்களவையில் பேசிய அவர், "நான் எந்த மதத்தையோ அல்லது சமூகத்தையோ பற்றிப் பேசவில்லை. அரசின் பிரச்சனைகளை மட்டுமே பேசினேன்.

ஆனால், எனது உரையைத் தொடர்ந்து மேடையை தூய்மைப்படுத்த ஹோமம் நடத்தியுள்ளனர். இதுதான் அரசியலமைப்பை பாதுகாப்பதா? நான் எதிர்க்கட்சித் தலைவர்.

நான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக யாரிடமும் இறக்கப்பட்டு எனக்குப் பாதுகாப்புத் தாருங்கள் என்று மன்றாடியதில்லை.

எனக்குப் போராடும் வலிமை இருக்கிறது, போராடிக் கொண்டும் இருக்கிறேன். ஆனால், என்னைத் தீண்டத்தகாதவராக நடத்தி, மேடையைச் 'சுத்தம்' செய்து அவமானப்படுத்துகிரீர்கள். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்." என வலியறுத்தினார்.

நட்டா விளக்கம்

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, "கார்கே ஜியின் உணர்வுகள் காயப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஆதரிக்காது. இச்சம்பவம் குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்தார்.