மத்தியப் பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் மீனாட்சி நடராஜன் தெலங்கானா மாநில காங்கிரஸின் பொறுப்பாளராக இருந்தபோது, ஐதராபாத் நீதிமன்றத்தில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கின் விவரங்களை வேட்புமனுவில் இருந்து மறைத்துவிட்டார் என்று பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை நிராகரித்தது. இந்நிலையில் இதை எதிர்த்து மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அதுல் சந்துர்கர் அடங்கிய அமர்வு,
ஒருமுறை தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன் பணிகள் தொடங்கிவிட்டால், இறுதி முடிவுகள் வெளியாகும் வரை நீதிமன்றங்கள் அதில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்ற முந்தைய உத்தரவை மேற்கோள் காட்டியது.
தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மீனாட்சி நடராஜனுக்காக விதிவிலக்குகளை உருவாக்க முடியாது என்றும் தேர்தல் முடிவடைந்த பிறகு உரிய உயர் நீதிமன்றத்தில் முறையிடுவதே இதற்கான ஒரே சட்டப்பூர்வமான வழி. தற்போதைய நிலையில் உச்ச நீதிமன்றம் இதில் தலையிடாது என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டனர்.
முன்னர் தேர்தல் செயல்முறையை நிறுத்தி வைக்ககோரிய மீனாட்சி நடராஜன் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.