இந்தியா

போர் என்பது இனி எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூடு மட்டும் அல்ல..!– ராஜ்நாத் சிங்

தீபாவளியை முன்னிட்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானப்படை வீரர்களை சந்தித்து இனிப்புகள் வழங்கினார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் பக்தோரா விமான படைத்தளத்தில் விமானப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளைமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

அப்போது, ராஜ்நாத் சிங் அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததுடன், அவர்களுடன் பண்டிகையை கொண்டாடினார்.

பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

போர் என்பது இனி எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டுடன் மட்டும் நின்றுவிடாது. அது சமச்சீரற்ற போராகவும், இணையவழித் தாக்குதல்களாகவும், ஆளில்லா விமானங்கள் மூலமாகவும், தகவல் திருட்டு மூலமாகவும் பல்வேறு வழிகளில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

இன்று, எதிரிகள் பெரும்பாலும் நேரடி மோதலைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக நமது பலவீனங்களைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள். சமூக ஊடகங்கள் வழியாக தவறான தகவல்களைப் பரப்பி, உள்ளூர் மக்கள் மற்றும் வீரர்களிடையே சந்தேக விதைகளை விதைக்கவும் நமது எதிரிகள் முயற்சிக்கின்றனர்.

பாதுகாப்பு படை வீரர்கள் இனி புதிதாக உருவாகும் இணையவழி மற்றும் தகவல் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் விழிப்புணர்வு மற்றும் விவேகத்தின் மூலமாக மட்டுமே எதிரியின் ஒவ்வொரு முயற்சியையும் நம்மால் முறியடிக்க முடியும்.

இந்த பண்டிகை காலத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்தினரை நினைத்து, அவர்களுடன் இருக்க முடியவில்லை என ஏங்குகிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், அந்த உணர்வுகளை உங்கள் இதயங்களில் புதைத்துவிட்டு, தேச பாதுகாப்புக்காக உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள் என்பதையும் நான் அறிவேன். உங்கள் தன்னலமற்ற உழைப்பிற்கு நான் தலைவணங்குகிறேன். உங்கள் தியாகத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT