இந்தியா

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற ஆயுதப்படை வீரர்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

6 தங்கம், 11 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்றனர்.

ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற ஆயுதப்படை வீரர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். ஆசிய விளையாட்டில் ஆயுதப்படை வீரர்கள் மொத்தத்தில் 27 பதக்கங்களை (6 தங்க பதக்கங்கள் உள்பட) கைப்பற்றி அசத்தினர்.

அவர்களுடனான உரையாடலின் போது, ​​திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அறிவியல் பூர்வமான பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகள் மூலம் அவர்களை மேம்படுத்துவதில் 'மிஷன் ஒலிம்பிக் விங்' (Mission Olympic Wing) ஆற்றிய பங்கை அவர் சுட்டிக்காட்டினார்.

மொத்தம் 27 பதக்கங்கள்:

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதற்கான கவனம் மற்றும் முறையான அணுகுமுறையின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். முப்படைகளை சேர்ந்த மொத்தம் 92 விளையாட்டு வீரர்கள் 19 வகையான போட்டிகளில் பங்கேற்று, 6 தங்கம், 11 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்றனர்.

ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் மட்டும் 20 பதக்கங்களை (6 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம்) வென்று, இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையில் சுமார் 24 சதவீத பங்களிப்பை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ தளபதி ஜெனரல் தீரஜ் சேத் அவர்களும் வீரர்களை பாராட்டியதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

ஆசிய போட்டிகளில் மொத்தத்தில் இந்திய குழுவினர் 85 பதக்கங்களை வென்றனர் - இதில் 21 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.

வெற்றியாளர் தனித்து உருவாக்கப்படுவதில்லை:

பெண் விளையாட்டு வீரர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மிகவும் ஊக்கமளிக்கும் அம்சமாக உள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ராணுவத்தை சேர்ந்த நான்கு பெண் குத்துச்சண்டை வீரர்கள் நான்கு தங்க பதக்கங்களை வென்றனர். அதேவேளையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண் விளையாட்டு வீரர்கள் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர் என்று ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதக்கம் வெல்வதற்கான பயணத்தில் அளப்பரிய அர்ப்பணிப்பு, அதிகாலை பயிற்சி, உடற்பயிற்சிகள், காயங்கள், அதிலிருந்து மீண்டு வருதல் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள் ஆகியவை அடங்கியுள்ளன என்று சிங் கூறினார். மேலும், ராணுவ பிரிவு சார்ந்த கடமைகளை செய்வதோடு விளையாட்டு பயிற்சிகளையும் மேற்கொண்டு, குடும்பத்தினரை பிரிந்து இருப்பது போன்ற சவால்களையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், உடலியக்க சிகிச்சையாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோரின் பங்களிப்பையும் சிங் அங்கீகரித்தார்; "ஒரு வெற்றியாளர் தனித்து உருவாக்கப்படுவதில்லை" என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் விளையாட்டு சூழலை வலுப்படுத்துவதில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், பங்கேற்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய விளையாட்டு அரங்கில் இந்தியாவை ஒரு "முன்னணி சக்தியாக" நிலைநிறுத்துவதே நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT