ராஜஸ்தானில் காவல்துறையின் அலட்சியத்தால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இரு சகோதரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஊரக பகுதியில் அரசு இணைய சேவை மையம் நடத்தி வந்தவன் மகிபால்.
இவன் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளான்.
அதை வைத்து மிரட்டி தன் நண்பர்கள் சிவராஜ், கோபால், விஜயராம், தினேஷ், மனோஜ், மற்றும் புக்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான். அவ்வப்பொது அப்பெண்ணிடம் பணம் பறித்தும் வந்துள்ளான்.
அப்பெண் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
தன் அக்காவின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பெண்ணின் இளைய சகோதரி ஏப்ரல் 11 அன்று காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரில் மகிபால், சிவராஜ், கோபால், விஜராம், தினேஷ், மனோஜ், புக்ராஜ் உள்ளிட்ட 8 பேரின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.
தனக்கு நீதி கிடைக்காவிட்டால் தானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று அவர் காவல்துறையினரை எச்சரித்திருந்தார்.
இருப்பினும், ஒரு மாதம் கடந்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அக்காவின் வீடியோக்களை பொதுவெளியில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, அந்த நால்வரும் இளைய சகோதரியையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த இளைய சகோதரி, கடந்த வெள்ளிக்கிழமை அங்கிருந்த தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராடினார்.
பின்னர் அவர் விஷம் அருந்திய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சகோதரிகளின் மரணத்தைத் தொடர்ந்து ஜோத்பூரில் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் முக்கிய குற்றவாளி மகிபால் உள்ளிட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். மற்ற 6 பேரை தேடும் பணியில் ஈடுபட்டள்ளனர்.
காவல்துறையினர் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்வதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.