இந்தியா

ராஜஸ்தான்: சட்டவிரோத பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து - 7 தொழிலாளர்கள் பலி

சட்டவிரோதமாக பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு குடோனில் நடந்த ஏற்பட்ட வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூரில் உள்ள தலாய் காலனி பகுதியில் உள்ள குடோனில் சட்டவிரோதமாக பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த குடோனில் 7 பேர் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் அங்கு எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் சிக்கிய 7 பேரும் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் சமீர், ஆபித், நாசிர், அப்துல் வாஹித் மற்றும் பிலால் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, அங்கு வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனப் பொருட்களே இந்த வெடி விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்த குடோன் அருகிலேயே ஒரு பட்டாசு தயாரிப்பு ஆலை இயங்கி வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.