ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் 300 அடி ஆழமுள்ள திறந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன், 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
அல்வார் மாவட்டத்தின் ராம்நகர் பகுதியிலுள்ள புடோலி கிராமத்தில் பானு குர்ஜார் என்ற சிறுவன் நேற்று (ஆக.31) மாலை பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளான். பட்டத்தை பிடிக்க முயன்று கீழே பார்க்காமல், மேலே பார்த்தவாறு ஓடியுள்ளான்.
அப்போது அப்பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றை மூடியிருந்த கல்லின் மீது சிறுவன் கால் வைத்து, தவறி உள்ளே விழுந்துள்ளான். சுமார் 50 முதல் 55 அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்க அப்பகுதி மக்கள் முயற்சித்துள்ளனர்.
தொடர்ந்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 11.30 மணிக்கு மீட்கப்பட்டுள்ளார். உடனே மருத்துவ பரிசோதனைக்காக அருகில் இருந்த அல்வார் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.