உச்சநீதிமன்றம், ரெயில்  
இந்தியா

டிக்கெட் தொலைந்துவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக ரெயில்வே இழப்பீடு வழங்க மறுக்க முடியாது - உச்சநீதிமன்றம்

சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது.

ரெயில் டிக்கெட் தொலைந்துவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக இழப்பீட்டுக் கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2017 செப்டம்பர் 27 அன்று, மகேஷ் பாய் என்பவர் குஜராத்தின் அகமதாபாத் வழியாக சூரத் செல்லும் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

சபர்மதி மற்றும் அகமதாபாத் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் பெட்டி திடீரெனத் தடம் மாறியதில், வாசலோரம் நின்றிருந்த அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு ஒரு மாதம் கழித்து அக்டோபர் 31 அன்று உயிரிழந்தார்.

சட்டப் போராட்டம்

அவரது பெற்றோர் இழப்பீடு கோரி ரெயில்வே உரிமை கோரல் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு, 2018 மே 17 அன்று விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது.

ரெயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த மகேஷ்பாயின் பெற்றோருக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் 9% வட்டி வழங்க ரெயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து இந்திய அரசு குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

மகேஷ்பாய் ரெயிலில் இருந்து விழுந்ததற்கான ஆதாரம் இல்லாததையும், பயணச்சீட்டு இல்லாததையும் காரணம் காட்டி, 2025 ஜூலை 15 அன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்திருந்தது.

உச்சநீதிமன்றம்

இதை எதிர்த்து மகேஷ் பாயின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு , நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

"ரெயில் டிக்கெட் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக இழப்பீட்டுக் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.

டிக்கெட் தொலைந்துவிட்டதாகவும், தான் அதிகாரப்பூர்வமாகப் பயணம் செய்ததாகவும் கூறி விண்ணப்பதாரர் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தால், அந்தப் பயணி சட்டவிரோதமாகப் பயணம் செய்தார் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு ரெயில்வேயையே சாரும்" என்று தெரிவித்தனர்.

தீர்ப்பு

ரெயில்வே தரப்பில் தாமதமாக அறிக்கை தயாரிக்கப்பட்டதற்கு இறந்தவரின் பெற்றோர் பொறுப்பல்ல என்றும், அதற்காக ரெயில்வே நிர்வாகம் எந்தவொரு நியாயமான விளக்கத்தையும் அளிக்கவில்லை.

நியாயமான காரணம் ஏதுமின்றி, தாமதமாக தயாரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ரெயில்வேயால் இழப்பீட்டுக் கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இறுதியாக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் இழப்பீட்டு உத்தரவை மீண்டும் உறுதி, தனது செப்டம்பர் 25 தீர்ப்பில் மனுதாரர்களுக்கு 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT