மத்தியப் பிரதேச மாநிலம் கஜுரஹோவில் இருந்து ராஜஸ்தானின் உதய்பூர் நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று பயணித்து கொண்டிருந்தது.
மொரேனா மாவட்டத்தில் ஹேதம்பூர் ரெயில் நிலையம் அருகே மாலை 4:15 மணியளவில் வந்தபோது ரெயிலின் பொதுப் பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அவசரக்கால சங்கிலியை இழுத்ததால் ரெயில் திடீரென நடுவழியில் நின்றது.
ரெயில் ஏன் நின்றது என்று தெரியாத சூழலில், ரெயிலின் ஏசி பெட்டியில் தீப்பிடித்துவிட்டதாக யாரோ வதந்தியை கிளப்பிவிட்டனர்.
இதனால் பெட்டிக்குள் இருந்த பயணிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தபடி அவசர அவசரமாக ரெயிலில் இருந்து கீழே அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்தனர்.
அந்த தண்டவாளத்தில் ஏறி ஓடிக் கொண்டிருந்த அதே விநாடி பெரோஸ்பூரில் இருந்து சியோனி நோக்கி சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதியது.
இதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர்.
மீட்பு
தகவல் அறிந்து ரெயில்வே மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேவையில்லாமல் அவசரக்கால சங்கிலியை இழுத்தவர் யார் என்றும் வதந்தியைப் பரப்பியது யார் என்பது குறித்தும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.